பார்வதி தேவி இத்தலத்தில் தவமிருந்து இறைவனை மணந்துக் கொண்டதாக தல வரலாறு கூறுகின்றது. வெளிப்பிரகாரத்தில் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. மூலவர் 'நித்திய சுந்தரேஸ்வரர்' என்றும், 'நெடுங்களநாதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். மிகச் சிறிய வடிவில் அழகான லிங்க மூர்த்தியாக, சதுர வடிவ ஆவுடையுடன் அருள்பாலிக்கின்றார். அம்பாள் 'ஒப்பிலா நாயகி' மற்றும் 'மங்கள நாயகி' என்னும் திருநாமங்களுடன் காட்சியளிக்கின்றாள். சற்று பெரிய திருவுருவம்.
கோஷ்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி திருவுருவம் சிறப்பு. பிரகாரத்தில் விநாயகர், அம்மையப்பர், சப்த மாதர்கள், ஐயனார், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், பூமகள், திருமகள் சமேத வரதராசப் பெருமாள், ஜேஷ்டா தேவி, அகத்திய லிங்கம், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர் சன்னதிகள் உள்ளன. சப்த மாதர்களில் வராகி அம்மனுக்கு மஞ்சள் கரைத்த நீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் ஆகிய உற்சவ மூர்த்திகளும் உள்ளனர்.
மூலவரின் கருவறையின் அமைப்பு சதுரமாகவோ, கஜபிருஷ்ட வடிவிலோ இல்லாமல் எண்கோண வடிவத்தில் அமைந்திருப்பது புதுமையான ஒன்றாகும். அதேபோல் கருவறையின் மீது ஒரு கோபுர விமானமும், அர்த்த மண்டபத்தின் மீது ஒரு விமானமும் உள்ளதும் புதுமையே.
அகத்தியர், வங்கிய முனிவர் ஆகியோருக்கு இறைவன் காட்சியளித்த தலம். திருஞான சம்பந்தர் 'இடர் களையும்' பதிகத்தை இத்தலத்தில்தான் பாடியருளினார்.
வைகாசி மாதம் விசாகத்தை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|